முன்னோட்டம்

மெய்நிகர் (Virtual) என்ற வேரிலிருந்து வந்தது மெய்நிகரி (Virtual Engine). மெய்க்கு நிகரான ஆனால் மெய் அல்லாத சூழல்களைக் குறிக்கிறது மெய்நிகர். அச்சூழல் பிம்பங்களை உற்பத்தி செய்யும் இயங்குதளத்தைக் குறிக்கிறது மெய்நிகரி. இதன் அடிப்படையில் இந்த புத்தகத்தின் கதைக்களமான தொலைக்காட்சியையும் அது சார்ந்த அமைப்பையும் மெய்நிகரியாகக் கருதுகிறேன். வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் நுட்பமாக அணுகும்போது உண்மைக்கும் இன்மைக்கும் இடைபட்ட ஓர் நிலையில் நாம் இயங்குவது புரிகிறது. நம் கண்கள் காணும் ஒவ்வொரு காட்சியையும் ஐம்பூதங்களைத் தாண்டி பல்வேறு சக்திகள் தீர்மானிக்கின்றன. அந்த சக்திகளை முழுக்க புரிந்துகொள்வதற்குள் நாம் விற்பனையாகிவிடுகிறோம். உண்மைக்கு நிகரான சில பிம்பங்கள் அனுதினம் நம்மோடு விளையாடிக்கொண்டிருக்கின்றன. அணுகுமுறையிலும் மொழி அமைப்பிலும் என் முந்தைய நாவல்களில் இருந்து மெய்நிகரி வேறுபட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கும் கதைச்சூழல்தான் இந்த மாற்றங்களைத் தருவதாக நம்புகிறேன். தலையில் விழுந்தது பறவை எச்சமா அல்லது மழைத்துளியா என்ற கேள்வியின்றி நடைதொடர்வது நம் இயல்பாகிவிட்டது. அந்த நடைப்பாதையில் இந்த நாவல் சின்னதாய் ஓர் இயல்பு மீறல்.

அன்புடன்,
கபிலன்வைரமுத்து.

கதைச்சூழல்

சென்னையில் மாடப்புறா என்ற தனியார் தொலைக்காட்சி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தயாரிக்க முடிவு செய்கிறது. நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக ஓர் அணியை உருவாக்க நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த ஐந்து இளைஞர்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் அனுபவமே - மெய்நிகரி.

கதைசொல்லி

FCP 10 – ஒளிப்பதிவு கருவியில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக் கணிப்பொறியில் ஏற்றியதும் அவற்றை ஒழுங்குபடுத்தி தொகுக்க உதவும் மென்பொருள் வகைகளில் ஒன்று. துண்டு துண்டு காட்சிகளாக கணினியில் கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமுதற் கதையாக வடிவமைப்பதே படத்தொகுப்பு என்ற பணியின் அடிப்படை. படத்தொகுப்பாளர்களும் ஒருவகை கதைசொல்லிகள்தான். மெய்நிகரியின் கதைசொல்லியும் டெரன்ஸ்பால் என்ற ஒரு படத்தொகுப்பாளன்தான். சிலர் டைரி எழுதுவது போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அனுபவங்களைக் காட்சித்தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் உடையவன். தற்போது தன் அறையில் அமர்ந்து மறக்க முடியாத சில நாட்களைத் திரும்பி பார்க்கிறான். கடந்த இரண்டு வருடங்களில் தான் எடுத்த புகைப்படங்கள் செல்போன் வீடியோக்கள் என்று பல தரவுகளையும் தன் எடிட்டிங் டைம்லைனில் அடுக்கி அழகுப்படுத்துகிறான். தன் மென்பொருளின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாக பிம்பங்கள் அனைத்தையும் பென்சில் ஓவியங்களாக மாற்றி மகிழ்கிறான். இந்தப் படங்களின் பின்னணியில் தன் பின்னூட்ட குரல் (voice over) வழி கடந்தகாலம் பற்றிய விவரணைகளை வழங்குகிறான். அவனை பாதித்த மனிதர்களைப் பற்றி சிறு குறிப்பு வரைகிறான். நினைவுகள் விரிகின்றன. டெரன்ஸ்பாலின் குரலாக கதை நகர்கிறது.

கதாகலைஞர்கள்

ஆசிரியர்

இது கபிலன்வைரமுத்து எழுதி பதிப்பிக்கப்படும் பத்தாவது புத்தகம். மூன்றாவது நாவல். பதினெட்டு வயதில் தன் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் தொடர்ந்து பல கவிதைகளையும் சிறுகதைகளையும் இயற்றியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் முதுகலை பயின்றபோது பூமரேங் பூமி என்ற தன் முதல் நாவலை எழுதினார். அதைத்தொடர்ந்து உயிர்ச்சொல் என்ற இரண்டாவது நாவல் வெளிவந்தது. கனவு காண்பது இவர் கவிதைகளின் விருப்பம். மனதின் நுட்பமான உணர்வுகளை எளிமையாகப் பதிவு செய்வது இவர் திரைப்படப் பாடல்களின் முயற்சி. வாழப்படுவது எழுதப்பட வேண்டும் என்பது இவர் நாவல்களின் நோக்கம். தமிழ் இலக்கியத்திற்கு புதிய களங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது கபிலன்வைரமுத்துவின் வேட்கை.

விற்பனை

Buy Online

BUY

Cash on Delivery

ORDER

At Stores

VISIT

கருத்துப்பதிவு